தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தவெக மேடைகளில் தொடர்ந்து திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். அதிலும் திமுக மிரட்டியதால்தன் ரஜினி அரசியலுக்கு வராமல் ஒதுங்கினார் என அவர் சொன்னது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் கொந்தளித்தார்கள். இதையடுத்து தனது பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா வருத்தமும் தெரிவித்தார். அதேநேரம் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தபோதும், ஜெயலலிதா அரசியலுக்கு வந்த போதும், விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போதும் அவர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்வைத்து அவர்களை திமுக ஒடுக்க நினைத்தது.. அதைதான் அவர்கள் ரஜினி விஷயத்திலும் செய்தார்கள்..
தற்போது விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையிலும் இப்போதும் அதையே செய்கிறார்கள். தவெகவுக்கும், விஜய்க்கும் எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை திமுக பரப்புகிறது என அவர் விளக்கம் அளித்தார்.
ஒருபக்கம் ஆதவ் அர்ஜுனா சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திமுகவுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா பேசிவருவது பற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் சேகர் பாபு ஒரு காலத்தில் லீடர் லீடர் என்று கைகட்டி கொண்டு நின்றவன்.. இப்போது எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற நோக்கத்தோடு பேசுகிறார்கள்.. நயவஞ்சகத்தோடு சுற்றித் திரியும் கூட்டத்திற்கு வில்லிவாக்கம் தொகுதியில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அவர் கூறினார்.