சமீப காலமாக சீமான் பேசியவை, செயல்பாடுகள் ஆகியவை தொடர்ந்து விமர்சனத்துக்கு உட்பட்டு வருகின்றன. ராஜீவ் காந்தி கொலை குறித்து விக்கிரவாண்டி தொகுதி பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சீமான் அதை சட்டரீதியாக அணுகப் போவதாக கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அவரது வீட்டுக்கும், நாம் தமிழர் கட்சி அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி சென்றார் சீமான்.
அங்கு செய்தியாளர்களிடம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது ரஜினி பேசியதை சுட்டிக்காட்டி பேசிய அவர் ”ஸ்டெர்லைட் போராட்டத்தில் பயங்கரவாதிகள் புகுந்து விட்டது ரஜினிக்கு எப்படி தெரியும்? அவர் என்ன உளவுத்துறை வைத்திருக்கிறாரா? அப்படியே அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் பயங்கரவாதிகளை பிடித்துதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்பாவி மக்களை ஏன் சுட்டார்கள்?” என கேள்வி எழுப்பினார்.
பயங்கரவாதிகள் புகுந்ததாக ரஜினி பேசியது குறித்து அவருக்கு சம்மன் அளிக்க வேண்டுமென நீதிபதியிடம் வலியுறுத்தப் போவதாகவும் சீமான் கூறியுள்ளார். சீமானின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டால் அவரும் இந்த வழக்கு விசாரணைக்கு பதில் அளிக்க வரவேண்டி இருக்கும். இதுகுறித்து ’சீமான் ராஜீவ் காந்தி சம்பவத்தை மறக்க செய்யதான் ரஜினியை ஸ்டெர்லைட் விவகாரத்தில் இழுத்து விடுகிறார்’ என அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.