இது குறித்து விரிவாக சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நாகை துறைமுகத்திலிருந்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி, 12 மீனவர்களுடன் ஆழ்கடல் மீன்பிடித்தொழிலுக்குச் சென்ற நாகூர் சம்பாத்தோட்டத்தைச் சேர்ந்த மீனவர் ரகுமகேந்திரன் காணாமல் போன செய்தி பெருந்துயரத்தையும், கவலையையும் அளிக்கிறது.
உடல்நலக்குறைவால் கரை திரும்பும் வழியில் கடந்த மார்ச் 26 அன்று விசைப்படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் ரகு மகேந்திரனின் நிலை என்னவானதென்று இதுவரை தெரியாத நிலையில் அவரது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
காணாமல் போன மீனவர் ரகுமகேந்திரனைத் தேடிக் கண்டுபிடித்துத் தரக்கோரி கடலோரக் காவல்துறை அதிகாரிகளிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை மனு அளித்தும், நேரில் சென்று முறையிட்டும் இதுவரை எவ்வித முறையான பதிலும் அளிக்கப்படவில்லை. மேலும், கடலோரக் காவற்படை மூலமாகத் தேடுவதாகக் கூறப்பட்ட போதிலும், மீனவர் காணாமல்போய் நான்கு நாட்களாகியும் தேடும் பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லையென்பது மிகுந்த வேதனைக்குரியது.
ஆகவே, தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, இந்திய ஒன்றிய அரசிடம் பேசி விமானப்படை மற்றும் கடற்படை உதவியுடன் காணாமல்போன மீனவரை விரைந்து கண்டறிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், மீனவர் குறித்த தகவலை அவரது குடும்பத்திற்கு உடனுக்குடன் அளிக்கவும், தேடும் பணியில் ஈடுபட விரும்பும் தன்னார்வல மீனவர்களுக்கு உரிய அனுமதிக் கடிதம் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
மேலும், மூன்று பெண் குழந்தைகளுடன் செய்வதறியாது தவித்துவரும் மீனவர் ரகுமகேந்திரனின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் துயர் துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும், கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.