மதச்சார்பின்மையும், சோசலிசமும் இந்தியாவின் அடையாளங்களாகத் திகழ்கின்றன - ராமதாஸ்

வியாழன், 29 ஜனவரி 2015 (13:03 IST)
இந்தியாவின் அடையாளங்களாக மதச்சார்பின்மையும், சோசலிசமும் திகழ்கின்றன; இனியும் அவ்வாறே திகழ வேண்டும் என்றும் இது குறித்த விவாதங்களும் தேவையற்றவை என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
குடியரசு நாளையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் பின்னணியில் இடம் பெற்றிருந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சோசலிச, மதச்சார்பற்ற என்ற வார்த்தைகள் விடுபட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இந்த இரு வார்த்தைகளும் 1976 ஆம் ஆண்டில் தான் சேர்க்கப்பட்டன என்பதால், அந்த விளம்பரத்தைத் தயாரித்தவர் தவறுதலாக பழைய முகவுரையை பயன் படுத்தியிருக்கலாம் என்ற ஐயம்தான் முதலில் ஏற்பட்டது.
 
ஆனால், சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய இரு வார்த்தைகளையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திலிருந்து அடியோடு நீக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியிருப்பதும், இது குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.
 
அதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில் அலுவலகப் பயன்பாட்டிற்காக இந்த இரு வார்த்தைகளும் இல்லாத அரசியலமைப்புச் சட்டத்தின் பழைய முகவுரையே பயன்படுத்தப்படும்; இதுதான் மத்திய அரசின் இப்போதையத் திட்டம் என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதும் சரியல்ல.
 
இவற்றையெல்லாம் பார்க்கும்போது இப்படி ஒரு சர்ச்சை எழ வேண்டும் என்பதற்காக திட்டமிட்டே குடியரசு நாளில் இப்படி ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. மதச்சார்பின்மையும், சோசலிசமும் இந்தியாவின் அடையாளங்களாக திகழ்கின்றன; இனியும் அவ்வாறே திகழ வேண்டும்.
 
அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இந்த இரு வார்த்தைகளும் இப்போது எப்படி இடம் பெற்றுள்ளனவோ, அதே போல் தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணமே இந்தியாவில் யாருக்கும் எழக்கூடாது; இதுகுறித்த விவாதங்களும் தேவையற்றவை.
 
மக்களவைத் தேர்தலின் போது நரேந்திர மோடியை வளர்ச்சியின் அடையாளமாகத்தான் மக்கள் பார்த்தார்கள். அதனால் தான் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தினார்கள்.

எனவே, இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகள் எழுவதை தவிர்த்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்