கடலூர் முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் : பள்ளிகளுக்கு விடுமுறை

திங்கள், 8 பிப்ரவரி 2016 (14:35 IST)
கடலூரில் பள்ளிகளுக்கு விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அங்கு ஏற்பட்ட பீதியை தொடர்ந்து பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 


 
 
கடலூர் கடற்கரை சாலையில் உள்ள சி.கே மேல் நிலைப்பள்ளிக்கு, இன்று காலை 7.30 மணிக்கு போன் செய்த ஒரு மர்ம நபர், அந்த பள்ளியில் குண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு போனை வைத்து விட்டார். 
 
இந்த தகவலை உடனே பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தெரிவித்தனர். போலிசார் விரைந்து வந்து அந்த பள்ளியில் சோதனை நடத்தினர். அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த தகவல் வதந்தியாக மாறி கடலூர் முழுவதும் பரவியது. இதனால் பெரிய கங்கணாங்குப்பம், சொரக்கல்பட்டி என சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு புரளி பரவியது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பீதியடைந்தனர்.
 
மேலும்,  இந்த தகவலை கேள்விப்பட்டு பயந்துபோன பெற்றோர்கள், அந்த பள்ளிக்களுக்கு முன்பும் கூடி விடுமுறை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். பள்ளி நிர்வாகம் எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர்கள் சமாதானம் அடைய வில்லை. அதனால் வேறு வழியின்றி அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
 
இதனிடையில், முதலில் வெடிகுண்டு மிரட்டல் வந்த சி.கே. கல்லூரி முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. 
 
எனவே, அந்த தகவல் புரளி என்பது தெரியவந்தது. 12ஆம் வகுப்புக்கான பிராக்டிகல் பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. அதை விரும்பாத மாணவர் யாரேனும் அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்களா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்