பள்ளி மாணவி மர்ம முறையில் படுகாயம் - தட்டிக்கேட்ட மாணவர் மீது பொய் வழக்கு

சனி, 25 ஜூன் 2016 (10:58 IST)
திண்டிவனம் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி காயமடைந்ததற்கு காரணம் என்ன என்பதை அறிய முயன்ற இந்திய மாணவர் சங்கத் தலைவர்களை காவல்துறை கொடூரமான முறையில் தாக்கியுள்ளது.
 

 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செயின்ட் பிலோமினா என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு திண்டிவனம் அருகில் உள்ள நெய்குப்பி கிராமத்தை சேர்ந்த தலித் கூலித் தொழிலாளியின் மகள் ஆனந்தி 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இவர், இம்மாதம் 23ம் தேதி காலை 11 மணிக்கு கழுத்து அறுபட்ட நிலையில் பள்ளியின் கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்டார். உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு அனுமதித்தனர். அங்கு மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.
 
இதற்கிடையில், மன அழுத்தம் காரணமாக கழுத்தை அறுத்துக் கொண்டதாக மாணவி ஆனந்தியின் தந்தையிடம் காவல்துறையினர் எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த தகவலை அறிந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட 20 பேர் அந்தப் பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் விசாரித்தனர். பின்னர், அப்பள்ளியின் முதல்வரையும் சந்திக்க முயற்சி செய்துள்ளனர்.
 
இந்த சூழ்நிலையில், டிஎஸ்பி சிலம்பரசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் அப்பள்ளி முன்பு குவிந்தனர். அமைதியான முறையில் பள்ளி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவர்களையும் சங்கத் தலைவர்களையும் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதோடு பூட்ஸ் காலால் உதைத்து காயப்படுத்தினர்.
 
கடுமையான காயங்களுடன் மாணவர்களை கைது செய்த காவல்துறையினர், 13 பேர் மீது பொய் வழக்குகளைப் புனைந்து ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு சிறையில் அடைத்துள்ளனர்.
 
இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய விசாரிப்பில், மாணவி ஆனந்தி 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 435 மதிப்பெண்கள் எடுத்துள்ளார் என்றும் 11ம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண் எடுத்திருப்பதும் தெரியவந்தது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்