காதலிக்க வற்புறுத்தியதால் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி : கரூரில் பரபரப்பு

வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (14:25 IST)
தன்னை காதல் செய்யுமாறு இளைஞர் ஒருவர் பள்ளி மாணவியை தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், பள்ளி மாணவி ஒருவர் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிரான தடுப்புச் சட்டம், கொலைமிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வாலிபர் கைது

கரூர் பொறியியல் கல்லூரி என்ற தனியார் கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சோனாலி என்ற பெண்ணை, உதயகுமார் என்ற முன்னாள் மாணவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தார்.

இந்நிலையில் அந்த காதல் ஒரு தலைப்பட்சம் என்பதாலும், காதலிக்க வற்புறுத்தி கல்லூரியில் பட்டப்பகலில் குடிபோதையில் மிரட்டியதையடுத்து அப்பெண் காதலை மறுக்க, உருட்டை கட்டையால் அடித்து அந்த பெண் கதற கதற உயிருக்கு போராடி கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

அந்த அதிர்ச்சி மறைவதற்குள் அதே பாணியில் ஒரு சம்பவம் அதே கரூர் மாவட்டத்தில் எழுந்துள்ளது.

கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, கிழக்கு அய்யம்பாளையம் பகுதியை சார்ந்தவர் கருப்பசாமி, இவரது மகன் சுரேஷ் (வயது 24), இவர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் உள்ள தனியார் பஞ்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இதே கடவூர் வட்டத்தில் உள்ள தளிவாசல் பகுதியில் வசிக்கும் கதிர்வேல் என்பவருடைய 17 வயது மகள், பாலவிடுதி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் அவ்வரி சுரேஷ் காதலித்து வந்துள்ளார் ஆனால் அந்த பெண் காதலை மறுத்துள்ளதாகவும் தெரிகின்றது.

இந்நிலையில், நேற்று மாலை பள்ளி சென்று வீடு திரும்பிய அவரை சுரேஷ் வழிமறித்து காதல் விவகாரம் குறித்து பேசியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த சிறுமி, கண்ணீருடன் அங்கிருந்து சென்று பாலவிடுதியில் உள்ள ஒரு கடையில் தங்கள் வீட்டில் எலி தொல்லை அதிகமாக உள்ளதாக கூறியும், அதை கட்டுப்படுத்தவும், எலியை ஒழிக்கவும் எலிமருந்து ஒன்று வாங்கி சென்றுள்ளார்.

அதை இரவு உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து பாலவிடுதி போலீஸார் அந்த சுரேஷ் என்கின்ற இளம் வாலிபரை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழும், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் இப்பகுதியில் மட்டுமில்லாமல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்

வெப்துனியாவைப் படிக்கவும்