கோவையில் பயங்கரம் - சிறையில் இருந்து ஜாமினில் வந்தவர் மீது துப்பாக்கி சூடு, அரிவாள் வெட்டு

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (12:33 IST)
கோவையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த நபரை போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர்.
 
தஞ்சாவூர் அருகே திருவிடை மருதூரில் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கறிஞர் ராஜா என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் என்பவர், பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் சிறையில் இருந்து கோவை சிறைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.
 
இந்நிலையில் கோவை சிறையில் இருந்த மணிகண்டன் புதனன்று மாலை ஜாமீனில் வெளியே வந்தார். இவரை அவரது உறவினர்கள் சிலர் காரில் அழைத்துக் கொண்டு தஞ்சாவூர் புறப்பட்டுள்ளனர். கோவை சிந்தாமணிபுதூர் அருகே இவர்களது கார் சென்று கொண்டிருந்த போது பத்துக்கும் மேற்பட்ட கும்பல் காரை மறித்து ஓட்டுனர் இருக்கையில் இருந்த ரவி என்பவரை துப்பாக்கியால் சுட்டனர்.
 
இதயத்தில் குண்டடிபட்ட ரவி காரை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து காரில் இருந்த மற்ற அனைவரையும் கும்பல் சராமரியாக அரிவாளால் வெட்டியது. இதன் பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
 
இந்த பயங்கர தாக்குதலில் தியாகு, மாதவன், அருண் ஆகிய மூன்று பேர் பலத்த வெட்டுக் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மாதவன் என்பவரது தலையை கொலையாளிகள் துண்டித்து எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
அதே நேரத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த மணிகண்டன் காரின் இருக்கையின் அடியில் பதுங்கியதால் உயிர் தப்பினார். இதன்பின் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு ரத்தக்கறையுடன் தப்பியோடியுள்ளார்.
 
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மணிகன்டனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வாகனத்தை ஓட்டி வந்த ரவி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்