சாத்தனூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

புதன், 25 நவம்பர் 2015 (14:56 IST)
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 

 
கடந்த 2 வாரங்களாகப் பெய்த கனமழை காரணமாக, திருவண்ணாமாலையில் உள்ள சாத்தனூர் அணையில் மொத்த நீர்மட்டமான 119 அடியில் 117 அடி நீர் நிரம்பியுள்ளது.
 
இதனால், 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், நீர் வரத்து அதிகரித்ததால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு தற்போது 2,989 கன அடி நீர்  வெளியேற்றப்படுகின்றது.
 
உபரி நீர் முழுவதும் அணையிலிருந்து வெளியேற்றப்படுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
பல ஆண்டுகளுக்குப் பிறகு சாத்தனூர் அணை நிரம்பியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்