சிறையில் சுயசரிதை எழுதும் சசிகலா: ஜெ. மரணத்திற்கு காரணம் அதிலாவது இருக்குமா?

செவ்வாய், 4 ஜூலை 2017 (09:16 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு அவரது தோழி சசிகலா தான் காரணம் என பொதுமக்கள் மத்தியில் பலரும் கூறினாலும், அரசியல் கட்சி தலைவர்கள் கூட அதனைத்தான் கூறுகின்றனர்.


 
 
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனி அணியாக செயல்படும் ஓபிஎஸ் அணியினர் கூட ஜெயலலிதாவின் மரணத்திற்கு சசிகலா தான் காரணம் என கூறுகின்றனர். சசிகலா மீது இப்படி குற்றச்சாட்டு வருவதற்கு காரணம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கடைசி 75 நாட்களும் அவர் சசிகலாவின் கண்காணிப்பில் தான் இருந்தார்.
 
அவருக்கான சிகிச்சையில் எந்த வெளிப்படைத்தன்மையில் இருக்கவில்லை. ஆளுநரை கூட முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை. அவரது புகைப்படத்தை வெளியிட வேண்டும் என தமிழகம் முழுவதிலும் இருந்தும் கோரிக்கை எழுந்தது. ஆனால் எதுவும் வெளியிடப்படவில்லை. இறுதியில் அவர் இறந்த பின்னரே தமிழக மக்கள் அவரை பார்க்க முடிந்தது.
 
இதனாலே அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும், மர்மங்களும் நிறைந்துள்ளன. இவை எல்லாவற்றிற்கும் சசிகலா தான் காரணம் என அனைவரும் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். அதற்கான பதிலை சசிகலா இதுவரை அளிக்கவில்லை. ஆனால் தற்போது அதற்கான பதிலை சசிகலா தனது சுயசரிதையில் எழுதிக்கொண்டு இருப்பதாக அவரது கணவர் நடராஜன் கூறியுள்ளார்.
 
சசிகலா தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது கணவர் நடராஜன் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பிரத்யேக பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், அவரிடம் ஜெயலலிதாவிற்கு திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போக வாய்ப்பில்லை. அவருக்கு இந்த அளவிற்கு உடல் நிலை சீர்கெடும் வரை அதை சசிகலா கவனிக்காமல் இருந்தது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த சசிகலாவின் கணவர் நடராஜன், அதை நீங்கள் சசிகலாவிடம் தான் கேட்க வேண்டும். நான் வேண்டுமானால் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்து தருகிறேன். பெங்களூருக்குச் சென்று நீங்களே இந்தக் கேள்வியை சசிகலாவிடம் கேளுங்கள். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறும் விதமாகத்தான் சிறையில் சசிகலா சுயசரிதை எழுதிக்கொண்டிருக்கிறார் என்றார். அந்த சுயசரிதையிலாவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது என்பது தெரியவருமா என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்