மாயமான எம்எல்ஏக்கள்: ஆட்சியமைக்கும் பலத்தை இழந்த சசிகலா அணி!

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (16:33 IST)
அதிமுக பிளவுபட்டு சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என  இரண்டாக செயபட்டனர். இரு தரப்பினரும் ஆட்சியமைக்க முயற்சி மேற்கொண்டனர். இதனால் அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் அடைத்து வைத்திருந்தார் சசிகலா.


 
 
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக 11 எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர். ஆனாலும் சசிகலாவுக்கு ஆட்சியமைக்கும் அளவிலான எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. ஆனால் அந்த எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் இருந்து வெளியே அனுப்பினால் அவர்கள் எங்களுக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் என ஓபிஎஸ் தரப்பு கூறியது. அவர்கள் அங்கு கட்டாயத்தின் பேரில் தான் உள்ளதாக கூறினார்கள்.
 
ஆனால் இன்று அதிரடி திருப்பமாக சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வந்தது. இதனால் சசிகலா முதலமைச்சராகும் கனவு தகர்ந்தது. இதனையடுத்து உடனடியாக ரிசார்ட்டில் எம்எல்ஏக்களின் கூட்டத்தை கூட்டிய சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற கட்சி தலைவராக அதாவது முதல்வராக அறிவித்தார்.
 
ஆனால் இந்த கூட்டத்தில் பல எம்எல்ஏக்களை காணவில்லை. அவர்கள் மாயமாகியுள்ள செய்தி தெரிய வரவும் சசிகலா தரப்பு கடும் அதிர்ச்சியாகியுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்ததை விரும்பாத எம்எல்ஏக்களும் அங்கிருந்து மாயமாகியதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சமியை தேர்ந்தெடுத்ததாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பினர். ஆனால் இந்த கடிதத்தில் எம்எல்ஏக்களின் கையெழுத்து இடம்பெறவில்லை. காரணம் ஆட்சியமைப்பதற்கும் குறைவான அளவிலான எம்எல்ஏக்களே அங்கு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
 
மாயமான எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு செல்லும் போது மேலும் அந்த அணி வலுபெற்று சசிகலா அணி பெரும்பான்மை ஆதரவை இழந்து இறுதியில் சட்டசபையில் இரு அணிகளும் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலே வரும் என கூறப்படுகிறது. ரிசார்ட்டில் இருந்து வெளியே வந்தாலே எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு செல்வார்கள் என கூறப்படுகிறது. எனவே சட்டசபையில் ஓபிஎஸ் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்