சிறைக்கு செல்லும் முன் கூவத்தூரில் சூளுரைத்த சசிகலா: ஓபிஎஸ்-ஐ தனிமைப்படுத்த வேண்டும்!

திங்கள், 20 பிப்ரவரி 2017 (11:05 IST)
தமிழக முதல்வராவதற்கு சசிகலா முயன்ற போது போர்க்கொடி தூக்கி தமிழகத்தையே பரபரப்பாக்கினார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதனால் சசிகலாவுக்கும், ஓபிஎஸுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.


 
 
அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் சசிகலா ஆனால் ஓபிஎஸுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு கூடிக்கொண்டே வந்தது. இந்த சூழலில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வந்தது.
 
இதனால் சசிகலா சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உடனடியாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவிக்கு நிறுத்திய சசிகலா அன்று இரவு கூவத்தூரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஆவேசமாக பேசியுள்ளார்.
 
அப்போது, நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கட்சி பிளவுபட காரணமாக இருந்தவர்களை மன்னிக்கவே கூடாது. நான் யாரை மன்னித்தாலும் மன்னிப்பேன் கட்சிக்கு துரோகம் செய்த பன்னீர்செல்வத்தை மட்டும் மன்னிக்கமாட்டேன். அவரை தனிமைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார் சசிகலா.
 
இதனையடுத்து தற்போது ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாக்குறுதிகள் அளித்து அவர்களை தங்கள் பக்கம் இழுத்து அவரை தனிமைப்படுத்தும் முயற்சிகளில் டிடிவி தினகரன் இறங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்