சாராய ஆலை நடத்தும் சசிகலா ஒருபோதும் முதல்வராக கூடாது: மாணவி நந்தினி சூளுரை!

திங்கள், 16 ஜனவரி 2017 (10:44 IST)
சட்டக்கலூரி மாணவி நந்தினி பல ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராடி வருகிறார். தனது தந்தையுடன் மதுவுக்கு எதிராக பலமுறை போராட்டங்கள் நடத்தியுள்ளார். இதனால் பலமுறை சிறைக்கும் சென்றுள்ளார் நந்தினி.


 
 
பொதுமக்களை குடி நோயாளியாக்கும் மதுவை அரசே நடத்துவதை தொடர்ந்து எதிர்த்து வரும் நந்தினி ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது மதுவிலக்குக்காக பல போராட்டங்கள் நடத்தினார். தற்போது தனது படிப்பை முடித்துள்ள நந்தினி பகத்சிங் புரட்சிகர இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் நந்தினி கூறுகையில், தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா தமிழகத்தின் அடுத்த முதல்வராக முயற்சி செய்து வருகிறார். இது நடக்கவே கூடாது. தமிழகத்தில் அதிக அளவில் மது சப்ளை செய்யும் நிறுவனமான மிடாஸ் நிறுவனத்தை நடத்துவது சசிகலாவின் உறவினர்கள் என்பது ஊரறிந்த ஒன்றாகும்.
 
இந்த மது ஆலை மூலமாக இவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வருகிறது. இப்படி மது ஆலை நடத்துபவர்கள் தமிழகத்தின் முதல்வராக எந்த காலத்திலும் வரக்கூடாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் தனது மது எதிர்ப்புப் போராட்டம் தொடரும் எனவும் நந்தினி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்