இது பொதுக்குழுவே கிடையாது.. அடித்து பறிக்கிறார்கள்! – சசிகலா குற்றச்சாட்டு!

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (14:22 IST)
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து சசிகலா கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்ந்தெடுத்தது.

நடந்து வரும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர் முழக்கமிட தொடங்கினர். அதை தொடர்ந்து ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், பால் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரையும் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த பொதுக்குழு கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த சசிகலா “அதிமுக பொதுக்குழு நடந்ததே செல்லாது. தலைமை பதவியை அடித்து பறிக்க நினைத்தால் அது நீண்ட காலத்திற்கு நிலைக்காது. பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை பொருளாளரே அறிவிக்க முடியும். ஆனால் பொருளாளராக இருந்த ஓபிஎஸ் கூட்டத்திற்கே செல்லவில்லை. அப்படி இருக்கையில் இது எப்படி பொதுக்குழுவாக ஏற்றுக் கொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “அதிமுகவில் இன்று நடைபெற்று வரும் களேபரங்களை பார்க்கும்போது கட்சி தொண்டர்கள் ஒன்றிணைவதற்கான நேரம் வந்துவிட்டது தெரிகிறது. விரைவில் அது நடக்கும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்