அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று ராயப்பேட்டையில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் பயங்கர மோதல் வெடித்தது.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளருக்கான வேட்புமனுக்கள் வழங்கப்பட்டுவருகிறது.
அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவே அதன் பொறுப்பை ஏற்றுக் கொண்டு கட்சியை வழி நடத்திச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், சசிகலாவே நாளை பொதுச் செயலராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா ஆரம்பம் முதலே சசிகலாவை எதிர்த்து வருகிறார். சசிகலா பொதுச்செயலாளராக வரக்கூடாது என கூறிய அவர் பொதுச்செயலாளர் தேர்தலில் சசிகலாவை எதிர்த்து நான் போட்டியிடுவேன் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரது வழக்கறிஞர் அதிமுக தலைமை அலுவலகம் வந்தனர். அவர்கள் சசிகலா புஷ்பாவின் வேட்புமனுவை கொண்டுவந்தார்கள் என கூறப்படுகிறது.
#WATCH: Suspended AIADMK MP Sasikala Pushpa's lawyer attacked outside party office by AIADMK workers in Chennai. pic.twitter.com/u10t63TmzX
அப்போது அங்கிருந்த அதிமுகவினருக்கும் அவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சசிகலா புஷ்பா தரப்பினருக்கு மிகுந்த அடி விழுந்துள்ளது. ரத்தம் சொட்ட சொட்ட சசிகலா புஷ்பா தரப்பினரை அடித்து விட்டினர் அங்கிருந்த அதிமுகவினர்.
கலவரம் ஏற்பட்டதை அடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடக்கூடாது என சசிகலா தரப்பு நினைக்கிறது.