சசிகலா ஆதரவு அதிமுகவின் கையில் 122 எம்.எல்.ஏக்கள் இருந்ததால் ஆட்சி தப்பித்துவிட்டாலும் சிக்கல் மேல் சிக்கல் வந்து சோதனைகளை சந்தித்து வருகிறது.
சசிகலாவின் முதல்வர் கனவு உச்சநீதிமன்ற தீர்ப்பால் பகல் கனவானது, இரட்டை இலை கிடைக்குமா? கிடைக்காதா? என்ற நிலை, கட்சி டிடிவி தினகரனிடம் சென்றுவிடும் அபாயம், ஓபிஎஸ்-இன் இடைவிடாத குடைச்சல் உள்ளிட்ட பல புதுப்புது பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது புதியதாக ஒரு பிரச்சனையாக சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தும் தற்போது சசிகலா கட்டுப்பாட்டில் இருப்பதால் ரூ.100 கோடியை சசிகலா தரப்பினர்தான் கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ரூ.100 கோடிக்கு எங்கே செல்வது? அந்த ரூ.100 கோடிக்கு வருமான வரித்துறையிடம் என்ன கணக்கு காண்பிப்பது என்ற புதுச்சிக்கலில் சசிகலா அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
நாளை தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ள விசாரணையின் முடிவில்தான் அதிமுகவின் எதிர்காலம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.