சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா விடுதலையாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சசிகலா விடுதலையாக சாத்தியம் உள்ளதா என்று கேள்வியும் எழுந்துள்ளது.
அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மீது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகர் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை சாலையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்களது தண்டனை காலம் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே சசிகலா விடுதலையாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியான நிலையில் சிறை அதிகாரிகள் அதை மறுத்துள்ளனர். ஆகஸ்டு 15 சுதந்திர தினத்திற்கு நன்னடத்தை அடிப்படையில் சசிகலா விடுதலையாவதாக கூறப்பட்ட நிலையில் அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில் ”சுதந்திர தினத்திற்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படும் கைதிகளின் பட்டியல் சுதந்திர தினத்திற்கு சுமார் 10 நாட்கள் முன்னர் தயாரிக்கப்படும். அது கர்நாடக மந்திரி சபைக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் வழங்கிய பிறகு கவர்னருக்கு அனுப்பப்படும். அவரின் ஒப்புதலுக்கு பிறகே அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்” என்று கூறியுள்ளனர்.