அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மீது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகர் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை சாலையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் வாங்கி குவித்த சொத்துக்கள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா பல்வேறு சொத்துகள் வாங்கியுள்ளது தெளிவாகியுள்ளது.
இரண்டு ஷாப்பிங் மால்கள், ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம், சர்க்கரை ஆலை, காகித ஆலை மற்றும் ஒரு ரிசார்ட் என பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை சசிகலா வாங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது. 1654 கோடி ரூபாய் அளவுக்கு அசையா சொத்துக்கள் வாங்கியதாகவும், 237 கோடி ரூபாய் கடனாக அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து சசிகலா தெரிவித்துள்ளதாவது, பணமதிப்பிழப்பின் போது 48 லட்சம் ரூபாய் அளவுக்கே தன்னிடம் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்ததாக, வருமான வரித்துறையிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.