எம்எல்ஏக்கள் மீது நம்பிக்கை இழந்த சசிகலா: சிறைவைப்புக்கு காரணம் என்ன?

வியாழன், 9 பிப்ரவரி 2017 (08:55 IST)
அதிமுக எம்எல்ஏக்களை சுதந்திரமாக நடமாடவிடாமல் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மகாபலிபுரம் அருகே உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளார். இதனை அரசியலில் சிறைவைப்பு என்று சொல்வார்கள். இதனை பன்னீர்செல்வம் ஆதரவு அணியில் உள்ள மைத்ரெயன் விமர்சித்துள்ளார்.


 
 
முதல்வர் பன்னீர்செல்வத்தின் அதிரடியால் மிரண்டுபோன சசிகலா நேற்று முன்தினம் இரவே போயஸ் கார்டன் வீட்டின் முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவசர அவசரமாக நேற்று காலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டினார்.
 
ஆளுநர் வரும் வரை அனைத்து எம்எல்ஏக்களையும் ஒரே இடத்தில் வைத்து தான் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக உள்ளார் சசிகலா. இதன் காரணமாக நேற்று எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்ததும் அவர்கள் சொகுசு பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டனர்.
 
விமான நிலையம் சென்று டெல்லிக்கு செல்ல திட்ட மிட்டிருந்தனர், ஆனால் இறுதி நேரத்தில் திட்டம் மாற்றப்பட்டு மேற்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
எம்எல்ஏக்கள் மனம் மாறி பன்னீர்செல்வம் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அனைவரும் ஒரே இடத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இதனை பன்னீர்செல்வம் ஆதரவு அணியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயான் விமர்சித்துள்ளார்.
 
தனது எம்எல்ஏக்கள் மீது நம்பிக்கை இல்லாததையே இது காட்டுகிறது. தனது எம்எல்ஏக்கள் மீது நம்பிக்கை இருந்தால் அவர்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டியது தானே. ஏன் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் சட்டசபையில் தங்களின் உண்மையான ஆதரவை சட்டசபை உறுப்பினர்கள் காண்பிப்பார்கள் என மைத்ரேயன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்