சசிகலா குற்றவாளி: உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் விபரம்!

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (11:08 IST)
ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேர் மீதானா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகியது. இதில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.


 
 
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணடைந்துவிட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
இந்த வழக்கில் கர்நாடக கீழ் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் 100 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
 
பின்னர் இதனை கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜூன் மாதமே நிறைவடைந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்தது நீதிமன்றம்.
 
இந்த வழக்கில், கீழ் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அறிவித்த தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம். முதல் குற்றவாளியான ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவருக்கான தண்டனை நிறுத்தப்பட்டுள்ளது. அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
மீதமுள்ள குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் தலா 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் தொடர்புடைய அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.
 
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 3 பேரும் நான்கு வார காலத்தில் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டுள்ளார்கள் நீதிபதிகள். இதன் மூலம் சசிகலா வரும் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது. மேலும் தற்போதைய அவரது முதல்வர் கனவும் தகர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்