சசிகலா, தினகரனை ஒரு கை பார்க்காமல் விடமாட்டாங்க போல: எடப்பாடி அணி தீவிரம்!

புதன், 2 ஆகஸ்ட் 2017 (09:46 IST)
சசிகலா மற்றும் தினகரனையும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களையும் அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அதிமுக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தனர்.


 
 
அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன் தான் தீவிரமாக கட்சி பணிகளில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். இதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த தினகரன் ஆகஸ்ட் 4 வரை பொறுமையாக இருக்க போவதாகவும். அதற்குள் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் இல்லையென்றால் தான் மீண்டும் தீவிரமாக கட்சி பணிகளில் ஈடுபட உள்ளதாக கூறினார்.
 
ஆனால் இதுவரை அதிமுகவின் இரு அணிகளும் இணையவில்லை. மாறாக தினகரனுக்கு என ஒரு அணி உருவாகி மூன்றாவது அணியாக அது மாறியதுதான் மிச்சம். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தினகரன் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்தார். ஆகஸ்ட் 5-ஆம் தேதி தலைமை கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக கூறினார்.
 
தினகரன் தலைமை கழகத்தில் நுழைந்தால் நிலமை தலைகீழாக மாறிவிடும் என அஞ்சிய எடப்பாடி தரப்பு நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தினகரன் குடும்பத்தினர் கட்சிக்குள் நுழைவதை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
 
இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கட்சியையும், ஆட்சியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழி நடத்துவார். இரு அணிகள் இணைப்பு வெற்றிகரமாக நடைபெறும் என்று நம்பிக்கை உள்ளது. சசிகலா, தினகரன் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை என மீண்டும் தங்கள் தினகரன் எதிர்ப்பு நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்