ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சரத்குமார் பிரசாரம் செய்ய தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

புதன், 24 ஜூன் 2015 (05:07 IST)
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் சரத்குமார் மற்றும் செ.கு.தமிழரசன் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து மக்கள் மாநாட்டு கட்சி வேட்பாளர் ஏ.பால்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:-
 
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த சரத்குமார் மற்றும் ஏ. நாராயணன், இந்திய குடியரசு கட்சியைச் சேர்ந்த செ.கு.தமிழரசன் ஆகியோர் கடந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றனர். இதனால், தமிழக சட்டப் பேரவையில் அவர்கள் அதிமுக உறுப்பினர்களாகவே உள்ளனர்.
 
இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியின் நட்சத்திர பேச்சாளர்களாக இவர்கள்  அவர்கள் சார்ந்த கட்சி சார்பாக 
அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
தேர்தலில் போட்டியிடாத கட்சியைச் சேர்ந்த இவர்கள் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டது தவறு. இவர்களை அதிமுக உறுப்பினர்களாகவே கருத வேண்டும்.
 
ஒரு கட்சிக்கு 40 பேர் மட்டுமே நட்சத்திர பேச்சாளராக இருக்க முடியும். இவர்களைச் சேர்த்தால், அதிமுகவுக்கு 43 பேர் நட்சத்திர பேச்சாளர்கள் என எண்ணிக்கை அதிகரித்துவிடும்.
 
அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்களும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சார்பில் 20 பேரும் பிரசாரம் செய்யலாம் என தேர்தல் விதிமுறையில் உள்ளது.
 
எனவே, அதிமுக வேட்பாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இவர்கள் நட்சத்திர பேச்சாளர்களாக பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்