ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு போலீசாரால் தாக்கப்பட்டு காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்றார். அப்போது சந்தோஷ்ராஜ் என்ற வாலிபர் ‘நீங்கள் யார்? 100 கழித்து ஏன் வந்தீர்கள்?’ என ரஜினியிடம் நேரிடையாக கேள்வி கேட்டு அவரை அதிர வைத்தார். அவருக்கு எந்த பதிலும் கூறாமல் ரஜினி அங்கிருந்து சென்று விட்டார்.
இதனால், டிவிட்டர் ‘நான்தான்பா ரஜினிகாந்த்’ என்கிற ஹேஸ்டேக் மிகவும் வைரலானது. மேலும், ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாற சமூக விரோதிகள் போராட்டக்காரர்களாக ஊடுருவியதே காரணம் என்றும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகும் என்றும் ரஜினி கருத்து தெரிவித்தார். இந்த விவகாரமும் பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
நானும் ரஜினியின் தீவிர ரசிகன்தான். அவர் நடித்த கபாலி படத்தை நின்று கொண்டே பார்த்தவன். அவருக்கு மக்களிடம் மவுசு இருக்கிறது. எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எங்கள் போராட்டத்திற்கு அவர் ஆதரவு கொடுத்திருந்தால் எங்கள் போராட்டம் வலுமை அடைந்திருக்கும். அதை அவர் செய்யவில்லை. அந்த கோபத்தில்தான் அவரிடம் அப்படி கேள்வி கேட்டேன். மற்றபடி அவரை காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அவரிடம் மட்டுமல்ல.. அமைச்சர் கடம்பூர் ராஜூ வந்த போதும் அவரிடம் சில கேள்விகளை எழுப்பினேன். அவர் எந்த பதிலும் கூறவில்லை.
துணை முதல்வர் ஓ.பி.எஸ் வந்தபோது கூட ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா?’ எனக்கேட்டேன். சற்று யோசித்த அவர் ‘இருக்கிறது’ என பதில் கூறினார். அப்படியெனில் அந்த ஆலை மீண்டும் தொடங்கப்பட்டால் நீங்கள் பொறுப்பேற்று கொள்கிறீர்களா?’ எனக் கேட்டேன். அதற்கு அவர் எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். சற்று நேரம் கழித்து என்னிடம் திரும்பி வந்த அவர், தம்பி நீங்கள் கூறியதை குறித்து வைத்துள்ளேன். நிச்சயமாக எங்களால் முடிந்ததை செய்வோம்’ எனக் கூறினார். அவர் கூறி சில மணி நேரங்களிலேயே ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது என சந்தோஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.