தமிழக அரசுக்கு நீதிமன்றம் அபராதம் - சகாயம் நியமனத்தை எதிர்த்த மனு தள்ளுபடி

செவ்வாய், 28 அக்டோபர் 2014 (14:41 IST)
கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்த இ.ஆ.ப. அதிகாரி உ.சகாயம் தலைமையிலான குழுவை நியமித்துப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், தமிழக அரசுக்கு நீதிமன்றம் ரூ.10,000 அபராதமும் விதித்துள்ளது.
 
முன்னதாக, மதுரையில் ஆட்சியராகப் பணியாற்றிய போது, இ.ஆ.ப. அதிகாரி உ.சகாயம், கனிம குவாரிகளில் நடைபெறும் மோசடிகளையும் முறைகேடுகளையும் வெளிக்கொணர்ந்தார். அது குறித்துத் தமிழக அரசுக்கு அறிக்கை அளித்தார். அதன் பேரில் சட்டவிரோத குவாரிகள் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. 
 
அண்மையில், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் சட்ட விரோதமாகச் சுரண்டப்படுகின்றன. ஆற்று மணல், ஜல்லி, கருங்கல் போன்றவற்றைச் சட்ட விரோதமாக எடுப்பவர்கள் மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. 
 
இது போன்று மதுரையில் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கனிம குவாரிகள் குறித்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அரசுக்கு அறிக்கை அளித்தார். அதனால், தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்படும் கனிம குவாரிகள் குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும். மேலும், அந்த குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, தமிழகம் முழுவதும் செயல்படும் குவாரிகளை ஆய்வு செய்வதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமனம் செய்தது. அந்தக் குவாரிகளை ஆய்வு செய்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கால நிர்ணயம் செய்தது.
 
இ.ஆ.ப. அதிகாரி சகாயம் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவுக்குத் தடை விதிக்கும்படி தமிழக அரசு செய்த மேல் முறையீட்டு மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
இந்நிலையில், சகாயம் குழு நியமனத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் தொழில் துறை செயலாளர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியார் அடங்கிய அமர்வு, இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிமன்றம், சகாயம் குழு அமைக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குப் பின்னர் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யக் காரணம் என்ன என்றும் வினவியது. இந்த மனுவால் அதிருப்தி அடைந்த நீதிமன்றம், தமிழக அரசுக்கு ரூ.10,000 அபராதம் விதித்தது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்