கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக சகாயத்திடம் புகார் மனுகள்: திடுக்கிடும் தகவல்கள்

செவ்வாய், 16 டிசம்பர் 2014 (11:52 IST)
கிரானைட் குவாரிகளில் சிறுமிகள்-வடமாநில வாலிபர்கள் நரபலி கொடுக்கப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று சகாயத்திடம் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 86 கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மதுரையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். 
 
கடந்த 3 ஆம் தேதி முதல் சகாயம் கிரானைட் முறை கேடுகள் குறித்து பொது மக்களிடம் புகார் மனுக்களை பெற்று வருகிறார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் சகாயத்திடம் கொடுக்கப்பட்டுள்ளன. கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், நிலங்களை இழந்த பொதுமக்கள், வீட்டுமனைகளை பறிகொடுத்த காவல்துறையினர் உள்ளிட்டோர் தங்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் 2 ஆம் கட்ட விசாரணையை மதுரையில் நேற்று சகாயம் தொடங்கினார். நேற்றும் ஏராளமானோர் புகார் மனு அளித்தனர். இதில் கிரானைட் குவாரிகளில் கொடுக்கப்பட்ட நரபலிகள் குறித்து 2 மனுக்கள் சகாயத்திடம் கொடுக்கப்பட்டன. இந்த மனுக்களில் திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 
கீழவளவு கம்பர்மலைப்பட்டியை சேர்ந்த சேவற்கொடியோன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
நான் கீழவளவில் உள்ள  ஒரு கிரானைட் குவாரியில் கடந்த 2003 வரை 5 ஆண்டுகள் லாரி டிரைவராக வேலை செய்தேன். இந்த குவாரியில் ஒடிசா, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்தனர். அவர்களில் சிலர் குவாரிகளுக்கு நரபலியாக கொடுக்கப்பட்டனர். 
 
தொழிலாளர்களை அழைத்து வந்த ஏஜெண்டுகளும் இதற்கு உடந்தையாக இருந்ததுடன் அந்த வாலிபர்கள் விபத்தில் இறந்து விட்டதாக அவர்களது குடும்பத்தினரிடம் உடலை கொடுத்து அனுப்பும் வினோதமும் நடந்து வந்தது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டன.

வெளிமாநிலங்களிலும், வெளிமாவட்டங்களிலும் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றிதிரிந்தவர்களை சாப்பாடு கொடுத்து வாகனங்களில் அழைத்து வந்தனர். புதிதாக குவாரி தொடங்கும் போதும், குவாரிகளில் புதிய கிரேன், புதிய பொக்லைன் வாங்கும்போதும், கேரளாவில் இருந்து வரவழைக்கப்படும் மந்திரவாதிகள் முன்னிலையில் வாலிபர்கள் நரபலி கொடுக்கப்பட்டனர். 
 
ஒரு முறை நானும், குவாரி மேலாளர் அய்யப்பனும் புதுக்கோட்டையில் உள்ள ஒரு  கிரானைட் குவாரிக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்போது ரோட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட 2 பேர் சுற்றி திரிந்தனர். மேலாளர் அய்யப்பன் அவர்களை வாகனங்களில் ஏற்றி வந்து பின்னர் 2 பேரையும் குவாரியில் நரபலி கொடுத்து விட்டனர்.
 
இதுபோல கரூர் மாவட்டம் தோகமலை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து நரபலி கொடுத்துள்ளனர். இதுகுறித்து வெளியே கூறினால் உனக்கும் இதே நிலைதான் ஏற்படும் என மிரட்டினர்.
 
கிரானைட் உரிமையாளர்கள் நரபலி கொடுத்தது குறித்து நீர்வள பாதுகாப்பு- ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் பல்வேறு புகார் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதனால் இந்த மனுவை இப்போது உங்களிடம் வழங்குகிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
 
புதுதாமரைப்பட்டியை சேர்ந்த ரவி என்பவர் தனது மனைவி ஜோதியுடன் வந்து சகாயத்திடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
 
கடந்த 2008 ஆம் ஆண்டு புதுதாமரைப்பட்டியில் உள்ள கிரானைட் குவாரியில் 3 வயது சிறுமி கோபிகா நரபலி கொடுக்கப்பட்டார். இதுதொடர்பாக குவாரியில் டிரைவராக வேலை பார்த்த என்னை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் 7 ஆண்டுகள் ஆகியும் இது வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
 
இந்த சிறுமி நரபலிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. காவல்துறையினரின் தவறான நடவடிக்கையால் எனது குடும்பமே மனவேதனைக்கு உள்ளாகி இருக்கிறது. எனது 2 மகன்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர். யாரோ செய்த கொலைக்கு என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட சகாயம், உங்கள் கருத்துக்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
 
கிரானைட் குவாரிகளில் சிறுமிகள் மற்றும் வடமாநில வாலிபர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பலர் நரபலி கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுபோன்று கிரானைட் முறைகேட்டு வழக்கில் நாளுக்கு நாள் தோண்ட, தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனிடையே கிரானைட் குவாரிகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தவும் சகாயம் திட்டமிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்