விஷால் சபாநாயகர், நடிகர் சங்கம் சட்டமன்றம்: எஸ்.வி.சேகரை சீண்டும் சுப உதயகுமார்!

வெள்ளி, 21 ஜூலை 2017 (17:07 IST)
கமல்ஹாசனின் கருத்துக்கு ஆளும் கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வரும் வேளையில் அவரை ஆதரித்து கருத்து கூறினார் நடிகர் எஸ்.வி.சேகர். அதில் அவர் கூறிய கருத்துக்கு சுப உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.


 
 
நடிகர் எஸ்.வி.சேகர் கூறும் போது, ரஜினி தனியாக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கட்டும், அந்த கட்சியில் கமல்ஹாசனும் சேர வேண்டும். வெற்றி பெற்றவுடன் ரஜினி முதலமைச்சராகவும், கமல் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்க வேண்டும்.
 
இந்த கூட்டணியில் அஜித், விஜய்யையும் சேர்த்து கொள்ளலாம். சினிமா நடிகர்கள் சரியான முறையில் ஆட்சி செய்வாரகள் என்பதை நிரூபிக்கட்டும். யார் அரசியலுக்கு வரவேண்டும், வரக்கூடாது என்று தீர்மானிப்பது ஓட்டு போடும் மக்கள் தானே தவிர, எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவரோ, மாவட்ட செயலாளரோ தீர்மானிக்க முடியாது என்றார்.
 
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்து எஸ்.வி.சேகரை சீண்டும் விதமாக தனது ஃபேஸ்புக்கில் சுப உதயகுமார் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
 
அதில், பல தோழர்கள் சுட்டிக்காட்டுவது போல, பார்ப்பனீயப் பூனைக்குட்டி பைய பையை விட்டு வெளியே வருகிறதோ? ஒரு முன்னாள் சிரிப்பு நடிகர் சொல்கிறார்: ரஜினி முதல்வராம், கமல் துணை முதல்வராம். அஜீத், விஜய் எல்லாம் அமைச்சர்களாம். (அப்படியே விஷாலை சபாநாயகராகவும், நடிகர் சங்கத்தை சட்டமன்றமாகவும் அறிவியுங்கள்.) தமிழகத்தை, தமிழினத்தைப் பற்றி நினைத்தால் கவலையாக இருக்கிறது என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்