ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் புதிய மாற்றம்: ராமதாஸ் கண்டனம்

செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (07:54 IST)
ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்படுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
“தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 2009 ஆம் ஆண்டு, நாட்டில் உள்ள அனைத்து ஊரக மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.
 
இதனால் கிராமப்புற பொருளாதாரம் வலுவடைந்து வரும் நிலையில், இந்தத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
புதிய மாற்றங்களின்படி, இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வந்த இந்தத் திட்டம், இனி 2,500 வட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும். இதனால் தமிழகத்துக்குத்தான் மிக அதிக பாதிப்பு ஏற்படும்.
 
தமிழகத்தில் தற்போது 385 வட்டங்களில் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், இனி 98 வட்டங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப் படும்.
 
இதில் தற்போது 63 லட்சத்து 20, 339 குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. அரசு அறிவித்துள்ள மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், 47 லட்சம் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும்.
 
எனவே, ஊரக வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலான திருத்தங்களைக் கைவிட்டு, இந்தத் திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் நீட்டிக்கும் வகையில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு முன் வரவேண்டும்.“ இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்