மீண்டும் ரத்தாகும் ஆர்கே நகர் தேர்தல்?: ஒரே நாளில் 100 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா!

சனி, 16 டிசம்பர் 2017 (17:44 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்தாகும் சூழல் நிலவி வருகிறது. அதிக அளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 100 கோடி ரூபாய் அளவில் பணப்பட்டுவாடா நடக்க வாய்ப்புள்ளதால் இந்த தேர்தல் மீண்டும் ரத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடக்க இருந்தது. ஆனால் அங்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா நடந்ததால் அந்த தேர்தல் ரத்தானது.
 
இதனையடுத்து இந்த இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. எனினும் இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக புகார்கள் எழுந்தது.
 
இதுவரை பணப்பட்டுவாடா தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் போலீசார் அவர்களை தவறுதலாக கைது செய்தனர், அவர்களை விடுவிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு கடந்த சில மணி நேரமாக அசாதரணமான சூழல் நிலவி வருகிறது.
 
அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை தடுக்க தவறிவிட்டனர் என திமுகவினரும், தினகரன் அணியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி மையத்தில் 13 லட்சம் ரூபாயை தேர்தல் பார்வையாளர்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விநியோகிப்பதாகவும், இன்று மட்டும் ஒரே நாளில் 60 கோடி ரூபாய் விநியோகிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரே நாளில் 100 கோடி ரூபாய் பணம் விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதனால் ஆர்கே நகர் தொகுதி மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.
 
இந்த பணப்பட்டுவாடா தொடர்பாக தலைமைச்செயலகத்தில் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா தலைமையில், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆர்கே நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்