பாஜகவின் கருத்தை பிரதிபலிக்கும் ரஜினி - அரசியலில் சறுக்குவாரா?

திங்கள், 16 ஜூலை 2018 (13:18 IST)
தமிழ்நாடு தொடர்புடைய பெரும்பாலான முக்கிய மக்கள் பிரச்சனைகளில் தமிழக அரசு மற்றும் பாஜகவின் கருத்தையே நடிகர் ரஜினிகாந்த் பிரதிபலிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
அரசியலுக்கு வருவேன் என 20 வருடங்களுக்கும் மேலாக திரைப்படங்களில் பஞ்ச் வசனங்கள் பேசிக்கொண்டிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ‘புதிய இந்தியா பிறந்தது’ என வரவேற்றார்.  மத்திய அரசுக்கு எதிராக அவர் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார்.
 
கடந்த டிசம்பர் 31ம் தேதி அரசியலுக்கு வருவதாய் அறிவித்தார். குறிப்பாக ஆன்மிக அரசியலை முன்னெடுப்பதாகவும் கூறினார். நாங்கள் ஏற்கனவே ஆன்மிக அரசியலைத்தான் செய்து கொண்டிருக்கிறோம் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியதை இங்கே நினைவு படுத்தி பார்க்க வேண்டும்.
 
கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக விமர்சனம் செய்த தமிழிசை, ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்பதாக கூறினார். மேலும், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் ரஜினிக்கு எதிராக எந்த கருத்தையும் கூறவில்லை.  எனவே, ரஜினி பாஜகவின் ஆதரவாளர் அல்லது பாஜக ரஜினியை ஆதரிக்கிறது என்கிற கருத்துகள் எழுந்தது. தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் பிரதமர் மோடியை போலவே ரஜினியும் வாய் திறக்காமல் மௌனம் கடைபிடித்தார். அதையும் மீறி அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைகளை கிளப்பியது. 

 
காவிரி விவகாரம் சூடுபிடித்திருந்த சமயத்தில், இயக்குனர் பாரதிராஜா, சீமான் போன்றோர் தலைமையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரை தாக்கியது தவறு என அவர் தெரிவித்த கருத்து  கடுமையான எதிர்ப்பை பெற்றது. ரஜினி தமிழனுக்கு எதிரானவர் என்கிற கருத்தை பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் அழுத்தமாக கூறினர்.
 
அதன்பின், தூத்துக்குடி விவகாரத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அதை கண்டித்து கருத்து கூறாத ரஜினி, அந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர் எனக் கூறி தமிழக மக்களின் கோபத்தை சம்பாதித்தார். அதன் பின்னர்தான் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் தங்களை தாங்களே சமூக விரோதிகள் எனக் கூறிக்கொள்ள தொடங்கினர். மேலும், மக்களின் கோபம் காலா படத்தை காலி செய்தது.
 
ஆனால், தமிழக மக்களின் கோபத்தை ரஜினிகாந்த் உணர்ந்தது போல் தெரியவில்லை. எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரிப்பதாகவும், நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது எனவும் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். 

 
எட்டு வழிச்சாலை திட்டத்தால் பல விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்கள் இழந்து நிற்கும் வேளையில் ரஜினி இப்படி கருத்து கூறியிருப்பது அவரின் மீதான மக்கள் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இதை சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக கூறப்படும் கருத்துகளிலும், மீம்ஸ்களிலும் உணர  முடிகிறது.
 
அதாவது, ஆளும் அதிமுக அரசு மற்றும் பாஜக ஆகியவற்றின் கருத்தோடு ரஜினியுன் கருத்து ஒத்துப்போகிறது. தமிழகத்தில் நோட்டாவோடு போட்டி போடும் பாஜகவின் கருத்தை ரஜினி ஆதரித்தால் அவரின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என மற்றவர் கூறி ரஜினி தெரிந்து கொள்ள தேவையில்லை. ஆனாலும், அவர் தொடர்ந்து அதுபோலவே கருத்து கூறி வருகிறார். அரசியல் ஆலோசகரும், பாஜக ஆதரவாளருமான ஆடிட்டர் குருமூர்த்தியுடனான அவரின் நெருக்கமும் இதை உறுதிப்படுத்துகிறது.
 
திராவிட கழங்கள் இல்லாத ஆட்சியை தமிழகத்தில் அமைக்க பாஜக முயன்று வருகிறது. பாஜகாவால் நேரடியாக தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது என்பதால், ரஜினியின் மீது சவாரி செய்ய பாஜக கருதலாம். ஆனால், இது ரஜினியின் அரசியல் எதிர்காலத்தை காலி செய்து விடும் என்பதை அவர் உணர வேண்டும்.
 
இல்லையேல், ரஜினிகாந்த் நிற்கும் தொகுதியில் அவர் டெபாசிட் பெறுவார் என்பதற்கு எந்த உத்தரவாதம் கொடுக்க முடியாது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்