துணை வேந்தர் பதவி பறிக்கப்படும்: கருணாநிதி காட்டம்
வியாழன், 11 பிப்ரவரி 2016 (06:15 IST)
எதிர்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டால் ஊழலுக்குச் சொந்தக்காரர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும், அவசர அவசரமாகப் பதவி ஏற்பவர்களும் பரிதவிக்கத்தான் நேரிடும் என கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி கேள்வி-பதில் பாணியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பதவிக்கு எட்டு கோடி ரூபாய் பேரம் நடைபெறுவதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருக்கிறாரே?
எதிர்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டால் இந்த ஊழலுக்குச் சொந்தக்காரர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அவசர அவசரமாகப் பதவி ஏற்பவர்களும் பரிதவிக்கத்தான் நேரிடும்.
துணை வேந்தர் பதவிகளும், அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் பதவிகளும் பல மாதங்களாகக் காலியாக இருந்த நிலையில், பலரும் அதைச் சுட்டிக்காட்டிய போது, அது பற்றிக் கவலைப் படாதிருந்த அதிமுக அரசு விரைவில் தேர்தல் வருகிறது என்றதும் அவசர அவசரமாக உள்நோக்கத்துடன் இந்தப் பணி இடங்களைப் பூர்த்தி செய்வதில் அக்கறை காட்டுகிறது.
அதிலே இலட்சக் கணக்கான ரூபாய் பேரம் பேசப்படுவதாகவும் அறிக்கைகளும், வழக்குகளும் வந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் அவசர அவசரமாக அந்த இடங்களில் சிலரை நியமிப்பதும், அவர்கள் அரசை விட வேகமாக அந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதையும் பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் விடுத்த அறிக்கை உண்மையாகத்தான் இருக்கும் என்ற சந்தேகம்தான் எல்லோருக்கும் ஏற்படுகிறது.
தற்போது செய்தித் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரிகளையும், கல்வித் துறையில் ஆய்வக உதவியாளர்களையும் நியமிப்பதில் அரசு அதிவேகம் காட்டி வருகிறதாம் என்று தெரிவித்துள்ளார்.