சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் கடந்த 18ம் தேதி, சமையல் அறைக்கு அருகில் இருந்த மின் கம்பியை உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
அவரின் மரணம் சிறையில் நிகழ்ந்ததால், மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி புழல் சிறைக்கு நேற்று சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கிருந்த ஒரு கைதி கூறிய தகவல் முக்கியமானதாக கருதப்படுகிறது. அவர் மாஜிஸ்திரேட்டிடம் கூறியபோது “ராம்குமார் தனியாக அடைக்கப்பட்டிருந்தார். அவரிடம் பேச யாரையும் அனுமதிக்கவில்லை. கடந்த வாரம் ராம்குமார் தனியாக இருந்த போது, நான் அவரிடம், கவலைப்படாதே.. எல்லாம் சரியாகி விடும்.. என்று கூறினேன். அதற்கு ராம்குமார் “சுவாதி யாரென்றே எனக்குத் தெரியாது.. நான் சீக்கிரம் இங்கிருந்து செல்ல வேண்டும்..நான் வெளியே சென்று போலீசார் என்னை எப்படி இந்த வழக்கில் சிக்க வைத்தார்கள் என்று தெரிவிப்பேன்”என்று கூறினார். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த சிறைத்துறை அதிகாரி எங்களை கடுமையாக எச்சரித்தார்” என்று அவர் மாஜிஸ்திரேட் தமிழ்செல்வியிடம் கூறினார்.