ஸ்வாதி, ராம்குமார் மரணம் தமிழகத்தையே அதிர வைத்த இரு முக்கிய நிகழ்வுகள். இளம்பெண் ஸ்வாதியை கொன்றதாக ராம்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் கொலை செய்தாரா, அப்பாவியா என்பதை நிரூபிக்கும் முன்னரே சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ராம்குமார் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் இன்னமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் ராம்குமார் மரணத்தின் காரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் குழுவில் உள்ள ஒரு மருத்துவர் கூறியதாக பிரபல தமிழ் வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், ராம்குமார் சிறையில் மின்சாரக் கம்பியை கடித்து இறந்துவிட்டதாகவே காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் நாங்கள் நன்றாக பரிசோதனை செய்துவிட்டோம். வாயில் மின்சாரம் தாக்கியதற்கான எந்தவித தடயமும் இல்லை. ஆனால் இடது பக்க மார்பில் மேலும், கீழுமாக ஸ்க்ரூ டைப்பில் இரண்டு காயங்கள் உள்ளன.
வலதுகை தோள்ப்பட்டையில் பிறாண்டியது போன்ற காயம், தாடைப் பகுதியில் காயமும் இருந்தது. இதை வைத்து பார்த்தால், மின்சாரமானது நெஞ்சுப் பகுதியில் தான் பாய்ந்துள்ளது. அதனால், நெஞ்சுப்பகுதியில் Electrocution என்று தான் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் எழுதியுள்ளோம்.
யாராவது கொலை செய்து கரண்ட் ஷாக் வைத்திருந்தால் ஹிஸ்டோபெத்தாலஜி ரிப்போர்ட்டில் தெரிந்துவிடும். உணவில் ஏதாவது கலந்து கொடுத்து கொலை செய்திருந்தால் விஸ்ரா ரிப்போர்ட்டில் முழுமையாகத் தெரியும். ஆனால், சம்பந்தப்பட்டவரை மயக்கமடைய வைத்து கரண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்திருந்தால் எந்த ரிப்போர்ட்டிலும் கண்டுபிடிப்பது சிரமம். இதனை காவல்துறையின் உண்மையான ஸ்பாட் இன்வெஸ்டிகேஷனில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று அதிர்ச்சி கொடுத்துள்ளார் அந்த மருத்துவர்.