பஞ்சாங்கம் கூறுவதுபோல் பலத்த மழை வருமா? : ரமணன் விளக்கம்

வியாழன், 19 நவம்பர் 2015 (12:25 IST)
பஞ்சாங்கம் சொல்வது போல் வரும் 21 ஆம் தேதி புயல் வருமா என்பதற்கு சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் விளக்கம் அளித்துள்ளார்.


 
 
சென்னை மற்றும் தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னை, கடலூர், திருவாரூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல இடங்களில்  மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்தது. செம்பரம்பாகம் ஏரி உட்பட பல ஏரிகள் நிரம்பியதால் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
 
இதனால் சாலைகளிலும், கூவம் ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பெரிய அளவில் மழை ஏதும் இல்லை. இந்நிலையில், வருகிற சனிக்கிழமை (21.11.2015) ஒரு புதிய புயல் உருவாகும் எனவும், இதனால் ஞாயிற்றுக்கிழமை (22.11.2015) சென்னையில் பலத்த  மழை பெய்யும் என பஞ்சாங்கத்தில் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
 
மேலும், அமெரிக்கவின் நாசா விண்வெளி மையமும், வருகிற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னையில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளதாக வாட்ஸ்-அப் களில் தகவல் பரவி வருகிறது.
 
ஏற்கனவே ஒரு வாரம் பெய்த மழையில் இருந்து இன்னும் மீளமுடியாத சென்னை வாசிகளுக்கு இந்த செய்தி அதிர்ச்சி அளித்தது. இதுபற்றி சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணிடம் கருத்து தெரிவித்தபோது :
 
“நான் உலக வானிலை வழிகாட்டுதல் படி, செயற்கைக்கோள் தரும் தகவல்களை கொண்டு தான் மழை பற்றிய தகவலை தெரிவிக்கிறேன். தற்போது வடகிழக்கு பருவமழை காலம். பொதுவாக வடகிழக்கு பருவமழை காலங்களில் தமிழகம் மழை பெய்யும். அந்த வகையில் தற்போது மழை பெய்துள்ளது. இனியும் மழை வரும்.
 
ஆனால் வாக்கிய முறை பஞ்சாங்கம், நாசா குறிப்பிடுவது போல் பலத்த மழை வருமா என்று என்னிடத்தில் கேட்காதீர்கள். அது எனக்கு தெரியாது. வானிலை தகவல்படி, அடுத்தகட்டமாக பலத்த மழையோ, எந்த ஒரு புதிய நிகழ்வோ இல்லை. வாட்ஸ்-அப்பில் வரும் தகவல்கள் பற்றியும் எனக்கு தெரியாது.
 
பொதுமக்கள் வானிலை குறித்து தெரிய வேண்டும் என்றால், வானிலை ஆய்வு மைய இணையதளத்துக்கு சென்று பார்க்கலாம். அதில், அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இல்லையெனில், பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்” என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்