போதை விபத்துகள், நடைபாதை ஆபத்துகள் - மதுவை ஒழிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

செவ்வாய், 14 அக்டோபர் 2014 (14:59 IST)
சாலை விபத்துகளுக்குக் காரணமான மதுவை அடியோடு ஒழிக்கவும், நடைபாதைவாசிகளுக்கு வீடுகளைக் கட்டித் தரவும் தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சென்னை வேளச்சேரி - தரமணி 100 அடி சாலையில் நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த ஏழைகள் மீது நேற்று அதிகாலை தாறுமாறாக ஓடிய மகிழுந்து ஏறியதில் கருவுற்ற பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இச்செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் துயரமும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மகிழுந்தை ஓட்டியவர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்தது தான் இந்த விபத்துக்குக் காரணம் என்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் நடைபாதையில் உறங்குபவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலை தான் காணப்படுகிறது.
 
சாலை விபத்துகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. இவ்விபத்துகளுக்கு முக்கிய காரணம் மது அரக்கன் தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. கடந்த 2013ஆம் ஆண்டில் 718 பேரும், 2012ஆம் ஆண்டில் 731 பேரும், 2011ஆம் ஆண்டில் 575 பேரும் குடிபோதையால் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இந்த உண்மைகளை எல்லாம் அறிந்திருந்தும் மது அரக்கனை ஒழிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
அனைத்து நெடுஞ்சாலைகளிலும், உட்புறச் சாலைகளிலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோரைச் சோதனை நடத்தி கண்டுப்பிடிப்பதற்காகத் தமிழகக் காவல் துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும்.
 
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னை மாநகர எல்லைக்குள் மட்டும் 2,586 குடும்பங்களைச் சேர்ந்த 11,116 பேர் நடைபாதைகளில் வாழ்வதாகத் தெரிய வந்திருக்கிறது. இவர்கள் தவிர பெருமளவிலான தனி நபர்களும் நடைபாதையிலேயே வசிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்தால் நடைபாதைவாசிகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டும்.
 
தமிழ்நாட்டில் குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டு, 50 ஆண்டுகள் ஆகப் போகிறது; ஆனாலும், சென்னையில் மட்டும் 15,000 பேர் குடும்பங்களுடன் நடைபாதைகளில் ஆபத்தான சூழலில் வாழ்கிறார்கள் என்பதே தமிழ்நாடு எந்தத் திசையை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்குச் சிறந்த உதாரணம் ஆகும்.
 
தில்லி போன்ற நகரங்களில் வீடு இல்லாத மக்கள் தங்குவதற்காக 185 இரவு நேர தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், சென்னையில் இத்தகைய 30 விடுதிகள் இருக்கும் போதிலும் அவை பயனின்றி முடங்கிக் கிடக்கின்றன. அரசின் அலட்சியம் காரணமாக அப்பாவிகளின் உயிர்கள் பறிபோவதை இனியும் அனுமதிக்கக் கூடாது. எனவே, சாலை விபத்துகளுக்குக் காரணமான மதுவை அடியோடு ஒழிக்கவும், நடைபாதைவாசிகளுக்கு வீடுகளைக் கட்டித் தரவும், வறுமையை ஒழிக்கும் வகையில் வேலை வாய்ப்புகளை பெருக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்