மக்களை முட்டாள்களாக நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள் - ராமதாஸ்

திங்கள், 20 ஏப்ரல் 2015 (16:28 IST)
மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு ஆட்சியாளர்கள் நடத்தும் துதிபாடல்கள் மற்றும் ஊழல்களுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் கடும் தண்டனை வழங்குவார்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
 
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்ட 260 பேருந்துகள், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரான பிறகு தான் இயக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் பணிமனைகளில் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த 6.3.2015 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன்.
 
6 மாதங்களாக அந்த பேருந்துகள் இயக்கப்படாத தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.2.88 கோடி இழப்பும், ரூ.58.50 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தேன்.
 
மார்ச் மாதத் தொடக்கத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் 260 பேருந்துகள் மட்டுமே முடக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 15.04.2015 நிலவரப்படி மொத்தம் 430 பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் இருநூறுக்கும் அதிகமான பேருந்துகள் கடந்த ஆகஸ்ட் முதல் 9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
 
கும்பகோணம் கோட்டத்துடன் இணைக்கப்பட்ட பணிமனைகளில் மட்டும் 51 பேருந்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழையிலும், வெயிலிலும் பராமரிக்கப்படாமல் கிடப்பதால் பழுதடைந்து வரும் அப்பேருந்துகள் இன்னும் சில மாதங்களில் ஓடும் திறனை இழந்துவிடும்.
 
மொத்தம் 460 பேருந்துகள் 2 முதல் 9 மாதங்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் அவற்றுக்கான வட்டி, காலாண்டு வரி, தேய்மானம் ஆகிய வகையில் மட்டும் சுமார் ரூ.4.64 கோடி இழப்பும், ரூ.91.35 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை; விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாததால் அரசுப் பேரூந்துகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
 
இதற்கெல்லாம் காரணம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடம் போதிய நிதி இல்லாதது தான் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தயார் நிலையில் உள்ள பேருந்துகளை இயக்கி வருவாய் ஈட்டுவது தான் சரியானதாக இருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு தான் இயக்குவோம் என்று அடம்பிடிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
 
சென்னை பெருநகரத் தொடர்வண்டித் திட்டம், சென்னை கோயம்பேடு தானியச் சந்தை வளாகம், தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள், செயல்படுத்தி முடிக்கப்பட்ட குடிநீர் திட்டங்கள் என பல்லாயிரக் கணக்கான திட்டங்கள் ஜெயலலிதாவுக்காக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு ஆட்சியாளர்கள் நடத்தும் துதிபாடல்கள் மற்றும் ஊழல்களுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் கடும் தண்டனை வழங்குவார்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்