இனப்படுகொலையை தமிழர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் - ராமதாஸ்

சனி, 20 டிசம்பர் 2014 (19:00 IST)
இனப்படுகொலையை தமிழர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். இலங்கை இனப் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் வரையில் ஓய மாட்டார்கள் என பாமக ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அதிபர் தேர்தலையொட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட ராஜபக்சே, கடந்த காலங்களில் நடந்ததை தமிழர்கள் மறந்துவிட வேண்டும்; இலங்கையின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இலங்கை அதிபராக இரு முறை பதவி வகித்து இப்போது மூன்றாவது முறையாக அப்பதவியை கைப்பற்றத் துடிக்கும் ராஜபக்சேவின் இந்தப் பேச்சு அவரது ஆணவத்தையும், தமிழர்களை மிரட்டும் மனப்பான்மையையும் தான் காட்டுகிறது. 
 
அதுமட்டுமின்றி, ஈரான், லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் நடந்தது போன்ற மக்கள் புரட்சியை ஒருபோதும் இலங்கையில் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அச்சுறுத்தும் தொனியில் பேசியிருக்கிறார். தமிழர்களுக்கு ஒருபோதும் சம அதிகாரமும், சம உரிமையும் வழங்க முடியாது என்பதை பல்வேறு தருணங்களில் தெளிவுபடுத்தியுள்ள ராஜபக்சே, இப்போது இப்படி கூறுவதன் மூலம் எந்த உரிமையும் இல்லாத அடிமைகளாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்; ஆட்சியாளர்களுக்கு எதிராகவோ, உரிமைகளைக் கோரியோ போராட நினைக்காதீர்கள் என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார். ராஜபக்சேவின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. 
 
துரோகங்களையும், சதிகளையும் மன்னித்து, மறப்பது தான் தமிழர்களின் குணம் ஆகும். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு இராஜபக்சே செய்த கொடுமைகள் கற்பனை செய்துபார்க்க முடியாதவை. போர் முடிந்து ஐந்தரை ஆண்டுகள் ஆன போதிலும் தமிழர்கள் இயல்பான வாழ்க்கையை வாழ முடியவில்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு இராணுவ வீரரை நிறுத்தி அச்சுறுத்துதல், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குதல், கட்டாயக் கருக்கலைப்பு மற்றும் கருத்தடை செய்தல் என அத்தனையையும் செய்து கொண்டிருக்கிறது ராஜபக்சே தலைமையிலான அரசு. 
 
ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஒட்டுமொத்த இலங்கையும் தமிழர்களின் தாயகமாக இருந்தது. அதை சிங்களர்கள் நயவஞ்சகமாக தங்களுடையதாக்கிக் கொண்டனர். அதன்பிறகும் இலங்கையின் வளர்ச் சிக்காக எண்ணற்ற பங்களிப்பை தமிழர்கள் செய்தனர். ஆனால், இதற்கெல்லாம் பரிசாக தமிழர்களை இரண் டாம் தர குடிமக்களாக்கி கொக்கரித்து கொண்டிருக்கின்றனர் சிங்களர்கள். இதையெல்லாம் மறந்துவிட்டு தமக்கு வாக்களிக்கும்படி ராஜபக்சே கோருகிறார். 
 
கடந்த தேர்தலில் தமிழர்களை படுகொலை செய்ததை சாதனையாக கூறி சிங்கள இன உணர்வுகளை தட்டி எழுப்பி வெற்றி பெற்ற அவர், இம்முறை தமிழர்களை நயவஞ்சக வலையில் வீழ்த்தி வெற்றி பெறத் துடிக் கிறார். இந்த வலையில் ஈழத் தமிழர்கள் வீழ மாட்டார்கள். அதேபோல், தமிழினத்திற்கு ராஜபக்சே செய்த இனப்படுகொலை உள்ளிட்ட கொடுமைகளை ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமி ழர்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். இலங்கை இனப் படுகொலைக்கு காரணமான வர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் வரையில் ஓய மாட்டார்கள் ” என்று கூறியுள்ளார். 
 
மேலும் அந்த அறிக்கையில், “ஒன்றரை லட்சம் தமிழர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் தமிழர் களுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஆதரவுக் கரம் கொடுக்க வேண்டும். இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக நடத்தப்படும் ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு இந்தியாவும், மற்ற நாடுகளும் உதவி செய்ய வேண்டும். தமிழீழ கோரிக்கை குறித்து உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தமிழர்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும்“ என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்