தமிழகத்தில் செயல்படாத அரசு இருப்பதை பயன்படுத்தி அணை கட்ட கேரளா முயற்சி - ராமதாஸ்

திங்கள், 4 மே 2015 (17:38 IST)
தமிழகத்தில் செயல்படாத அரசு பதவியிலிருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப்பணிகளை கேரள அரசு மீண்டும் துவங்கியிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப்பணிகளை கேரள அரசு மீண்டும் தொடங்கியிருக்கிறது. இதனால் விவசாயிகளிடையே அச்சமும், பதற்றமும் அதிகரித்துள்ளது. இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையிலான கேரள அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. 
 
முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் கேரள அரசு கடந்த 8 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதித்ததுடன், பேபி அணையில் பராமரிப்புப் பணிகளை முடித்தவுடன் நீர்மட்டத்தை முன்பிருந்தவாறு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதுமட்டுமின்றி, முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவும், அதற்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டிய தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெளிவாக ஆணையிட்டிருந்தது. 
 
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் எப்போதோ அளித்த சுற்றுச்சூழல் ஆய்வுக்கான அனுமதியை வைத்துக் கொண்டு, புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை கேரள அரசு மேற்கொள்வது சரியல்ல. இதற்கு முன்பு வல்லக்கடவு பாதையில் 15 இடங்களில் கேரள அரசு ஆய்வு மேற்கொண்ட போது தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அப்பணிகளை நிறுத்திய கேரளா, தமிழகத்தில் செயல்படாத அரசு பதவியிலிருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. இதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.
 
2011 ஆம் ஆண்டின் இறுதியில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தீவிரமடைந்ததால் தமிழகத்தில் மதுரை, தேனி மாவட்டங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டது; ஒரு கட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையாகவும் உருவெடுத்தது. மீண்டும் அதேபோன்ற நிலை ஏற்படுவதற்கும், இரு மாநில உறவுகள் பாதிக்கப்படுவதற்கும் கேரள அரசு வழி வகுக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து ஆய்வுப்பணிகளை கேரளம் நிறுத்த வேண்டும்.
 
தமிழக அரசும், மத்திய அரசும் இந்தப் பிரச்சனையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காமல், முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரள அரசு மேற்கொண்டு வரும் ஆய்வுப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்