பாமக தலைமையை ஏற்றால் பாஜகவுடனான கூட்டணி தொடரும் - ராமதாஸ்

செவ்வாய், 16 டிசம்பர் 2014 (11:23 IST)
வருகிற 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையை ஏற்றால் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
 
தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 
கர்நாடகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு செல்வாக்கு சரியும்போதெல்லாம் தமிழகத்தில் உள்ள ஒகேனக்கல் தங்களுக்குச் சொந்தம் எனக் கூறி வருகின்றனர். கடந்த 2008 இல் இதுபோல கூறி பாஜக தலைவர் எடியூரப்பா ஒகேனக்கல் எல்லைக்கு வந்தார். பின்னர், அங்கு பாஜக ஆட்சியைப் பிடித்தது.
 
அவர்கள் ஒகேனக்கல் தங்களுக்குச் சொந்தம் என்று சொன்னால், கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதி எங்களுக்குச் சொந்தம் என சொல்ல வேண்டிய நிலைவரும். எனவே, பொறுப்புள்ள பதவியில் உள்ளவர்கள் இதுபோல பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
 
தேசிய அளவில் மதுக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். அண்மையில் வானொலியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மது இளைஞர்களை பேரழிவுக்கு அழைத்துச் செல்கிறது. மது இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றார். அவருக்கு பாமக பாராட்டுத் தெரிவிக்கிறது. ஆனால், இது வெற்று வார்த்தையாக இருக்கக் கூடாது. அதனைச் செயல்படுத்த வேண்டும்.
 
வருகிற தேர்தலில் மது, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக எங்களது பிரசாரம் இருக்கும். தருமபுரி-மொரப்பூர் ரயில் பாதை திட்டம் வருகிற ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
 
தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் துயரத்தை அளிக்கிறது. இதற்கு பெண்களின் திருமண வயது, வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம் ஆகியவை காரணங்களாகும். எனவே, பெண்ணின் திருமண வயதை 21- ஆக உயர்த்த வேண்டும். கருவுற்ற பெண்களுக்கு சத்தான உணவு அவர்களது சொந்த வீடுகளுக்குச் சென்று வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
தருமபுரியில் எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்க வேண்டும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்காகத் தொடங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குறைகளைக் களைந்து அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும். தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகளிடமிருந்து மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்கின்றனர். இந்த மாற்றத்தை பாமக அளிக்கும்.
 
வருகிற சட்டப்பேரவை தேர்தலில் பாமக தலைமையில் மாற்று அணி போட்டியிடும். எங்களது தலைமையை ஏற்றால் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்றார் ராமதாஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்