"தாழ்த்தப்பட்ட சாதி எது?" பல்கலைக்கழக கேள்வி - ராமதாஸ் கண்டனம்!

வெள்ளி, 15 ஜூலை 2022 (12:15 IST)
பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேட்கப்பட்டிருந்த கேள்வி சர்ச்சையான நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் சமீபத்தில் நடந்த வரலாறு பாடத்திற்கான பருவத்தேர்வில் சாதி குறித்து கேட்கப்பட்டிருந்த கேள்வி கடும் கண்டனங்களையும், சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள பல்கலைகழக நிர்வாகம் கேள்வி தாள் வெளியேயிருந்து தருவிக்கப்பட்டதாக கூறியுள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு இரண்டாம் பருவத் தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா எழுப்பப்பட்டு, அதற்கு மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜன்கள் ஆகியவற்றிலிருந்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது!

தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்களை அறிய பல வழிமுறைகள் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வினா எழுப்பப்பட்டது தவறு. இது வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் தேர்வு நடத்தியவர்களின் சாதிய வன்மத்தையே காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது!

சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலை.யில் இக்கொடுமை நடந்திருப்பதை மன்னிக்க முடியாது. வினாத்தாள் தயாரித்தவர்கள், அதை சரிபார்க்கத் தவறியவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்