தமிழகத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் - ராம.கோபாலன்

புதன், 4 மார்ச் 2015 (17:51 IST)
மகாராஷ்டிர மாநிலத்தைப் போல தமிழகத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மகாராஷ்டிர அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சித் தடை சட்டத்தை இந்து முன்னணி வரவேற்கிறது. உண்மையில் இதற்கு முன் உதாரணமாக தமிழகம் தான் இருந்திருக்க வேண்டும். திருவள்ளுவருக்கு சிலை வைத்தவர்கள் அவர் வலியுறுத்திய கொல்லாமை, கள்ளுண்ணாமையை மறந்து விட்டார்கள். தமிழகத்தில் வீதியெங்கும் மாட்டிறைச்சி பிரியாணி கடைகள், மதுபானக் கடைகளையுமே காண முடிகிறது.
 
இவர்கள் தமிழையும் நேசிக்கவில்லை. தமிழ் கூறும் அறங்களையும் பின்பற்றவில்லை என்பதே வேதனையான உண்மை. நமது மக்கள் பசுக்களையும், காளைகளையும் தெய்வமாக வழிபடுபவர்கள். அதன் ஆற்றலை உணர்ந்த நம் முன்னோர்கள் ஆலயங்களில் பசு மடங்களை அமைத்தார்கள்.
 
இந்தியா இன்றும் விவசாய நாடுதான். இது நீடிக்க வேண்டுமானால் பசு பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். பசுஞ்சாண உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தினால் உலக அரங்கில் நமது விவசாயப் பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும். மக்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
 
எனவே, மகாராஷ்டிரத்தைப் பின்பற்றி தமிழகத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும். நாடு முழுவதும் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வருவதோடு, மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். இது தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதி என்பதை நினைவுப்படுத்த விரும்புவதாக இராம. கோபாலன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்