செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு பதிவேட்டை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சனி, 12 மார்ச் 2016 (09:25 IST)
செம்பரம்பாக்கம் ஏரியில் மழைபெய்த காலகட்டத்தில் நீர் இருப்பு, வரத்து, வெளியேற்றம் குறித்த பதிவேட்டை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



 

 
சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி தொழிலதிபர் ராஜீவ் ராய் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
 
அந்த மனுவில், உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோர் அடங்கிய உயர் நிலைக் குழுவை அமைக்க உத்தரவிடக் கோரியிருந்தார்.
 
இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
 
இதைத் தொடர்ந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-
 
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ள பாதிப்பின்போதும், வெள்ளம் ஏற்பட்ட பிறகும் எத்தனை கூட்டங்கள் நடத்தப்பட்டன என்பது குறித்த விவரங்களை தமிழக அரசு பதில் மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.


 

 
மேலும், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் 29 முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நீர் இருப்பு, வரத்து, வெளியேற்றம் குறித்த பதிவேட்டையும் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணை ஏப்ரல் 13 ஆம் ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்