மழை வெள்ள நிவாரண பணிகளுக்காக 500 கோடி ஒதுக்கீடு: ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள், 16 நவம்பர் 2015 (18:57 IST)
தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கான நிவாரண பணிகளுக்காக ரூ 500 கோடியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


 

 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழை காரணமா கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல அமைச்சர்கள் முகாமிட்டு மீட்புப் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
 
அந்த மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த விவசாயப் பயிர்கள் நாசமாயின. அத்துடன் எராளமான கால்நடைகள் உயிரிழந்தன.
 
இதேபோல, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பதிப்புகளை சந்தித்துள்ளன.
 
இதனால், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழக்கப்பட்டு, வெள்ள நீரால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.
 
இதைத் தொடர்ந்து, இன்று சென்னை ஆர்.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று பார்வையிட்டார்.
 
இந்நிலையில், தமிழகத்தின் வெள்ள நிவாரண பணிகளுக்காக 500 கோடி ஒதுக்கப்பட்டிப்பதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு உடனடியாக உதவுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்