புதுச்சேரியில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான காவல்துறை ஏட்டு சரண்

வியாழன், 5 மார்ச் 2015 (11:17 IST)
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, புதுச்சேரியில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தவர்களுள் ஒருவர் சி.ஐ.டி. காவல்துறையினரிடம் சரண் அடைந்தார்.
 
புதுச்சேரியில் சிறுமிகளை வைத்து விபசார தொழில் செய்த கும்பல் ஒன்று சிக்கியது. இந்த விபசார கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட 14 வயது சிறுமி குழந்தை பெற்றிருந்தார்.
 
இந்த வழக்கு குறித்து சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் விபசார கும்பல் பயன்படுத்திய டைரியில் காவல்துறையினர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்கள் இருந்தன.
 
இதனையடுத்து சி.ஐ.டி. காவல்துறையினர் விபசார கும்பலுடன் தொடர்பில் இருந்த 8 காவல்துறையினர் பணியிடைநீக்கம் செய்தனர்.
 
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினரின் அடையாள அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பில் காவல்துறை ஆய்வாளர்கள் சுந்தர், யுவராஜ், காவல்துறை துணை ஆய்வாளர் அனுஷா பாஷா, பாலகிருஷ்ணன், காவலர்கள் பண்டரிநாதன், குமாரவேலு, சங்கர், செல்வகுமார் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் ராஜாராமன் ஆகியோரை சிறுமிகள் அடையாளம் காட்டினர்.
 
இதனை தொடர்ந்து அந்த காவல்துறையினர் தலைமறைவாகினர். தலைமறைவான காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் காவல் துறையிடம் சரணடைய 24 மணி நேர கெடு வழங்கப்பட்டது.
 
இதனையடுத்து, பாலகிருஷ்ணன்,  சங்கர், செல்வகுமார் ஆகியோர் சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து, சரணடையாத 6 பேரின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டு துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தது.
 
இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய பண்டரிநாதன் சி.ஐ.டி. காவல்துறையினரிடம் சரண் அடைந்தார். சரண்னடைந்த பண்டரிநாதனை காவல்துறை தலைமை நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
 
தொடர்ந்து தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை காவல்துறையினர் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்