மக்கள் எதிர்ப்பால் ஓட்டம்பிடித்த சசி ஆதரவு தனியரசு எம்எல்ஏ: கோவில் திருவிழாவில் பரபரப்பு!

திங்கள், 27 பிப்ரவரி 2017 (13:19 IST)
அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ஆதரவாக இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ளது.


 
 
ஆங்காங்கே தொகுதிக்கு செல்லும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பொதுமக்களால் விரட்டியடிக்கப்படும் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்த போதே மக்கள் தங்கள் தொகுதி எம்எல்ஏக்களை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டி, காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர்.
 
இந்நிலையில் அவர்களை தொகுதிக்குள் விடாமல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கேயம் தொகுதி தனியரசு எம்எல்ஏ சசிகலா தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்ததால் அவருக்கு எதிராகவும் மக்கள் போஸ்டர் ஒட்டினர். இந்நிலையில் தொகுதிக்கு சென்ற தனியரசு எம்எல்ஏ மக்கள் எதிர்ப்பால் ஓட்டம் பிடித்துள்ளார்.
 
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் வீரக்குமாரசாமி கோவிலில் மாசி மஹா தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. இதில் பங்கேற்க காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு வந்தார். அவர் தேரின் வடத்தை பிடித்து இழுக்க முயன்றபோது அங்கு இருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அப்போது தனியரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஒருவரை தனியரசுவின் ஆதரவாளர் தாக்கியதால் அங்கிருந்த மக்கள் ஆவேசமடைந்தனர். தொகுதி பக்கம் வராமல் சசிகலாவுக்கு ஆதரவு அளித்துவிட்டு, இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு தேர் இழுக்க மட்டும் வருகிறார் என மக்கள் கேள்வி எழுப்பினர்.
 
மேலும் உடனடியாக வெள்ளக்கோவிலை விட்டு தனியரசு வெளியேற வேண்டும், தனியரசு ஒழிக, தனியரசு வெளியேறு, போலீஸ் அராஜகம் ஒழிக என அங்கு திரண்டிருந்த மக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினரின் பலத்து பாதுகாப்புடன் தனியரசை அழைத்து சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்