தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை: இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட 400 பேர் கைது

வெள்ளி, 31 அக்டோபர் 2014 (14:32 IST)
கொழும்பு நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்ததைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர்.
 
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, த.தே.பொ.க. மணியரசன், தோழர். தியாகு உள்பட சுமார் 300 பேர் இலங்கை தூதரகத்தை நோக்கி ஆவேசம் பொங்க முழக்கமிட்டு முற்றுகையிடச் சென்றனர்.
 
காவல்துறையினர் அவர்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது திடீரென தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்தனர். இலங்கை நாட்டு கொடியையும் தீ வைத்து கொளுத்தினார்கள்.
 
இதைப் பார்த்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் 400 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் அனைவரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்