வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்: 8 மாத கர்ப்பிணியின் கண்ணீர் கதை

செவ்வாய், 29 ஜூலை 2014 (13:57 IST)
வங்கதேசத்திலிருந்து அழைத்து வரப்பட்டு இந்தியாவின் பல நகரங்களில் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளப்பட்ட இளம்பெண்ணின் கண்ணீர் கதை.
 
வங்கதேசம், குர்நானா பகுதியைச் சேர்ந்த விவசாயி  சையத்கான் (55). இவரது மனைவி மஞ்சராபேகம். இவர்களுக்கு 2 மகன்கள், ஷனத்தீக் (20) என்ற மகள் உள்ளனர். ஷனத்தீக்கிற்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சையத்கானிடம் அவரது தம்பி ரகுமான் கூறியுள்ளார். இதனை நம்பி, ஓராண்டுக்கு முன்னர் ஷனத்தீக்கை, தம்பி ரகுமானுடன், சையத்கான் அனுப்பி வைத்துள்ளார். 
 
ஷனத்தீக்கை ரகுமான் கொல்கத்தாவிற்கு அழைத்து வந்து, அங்கு விபச்சார பெண் புரோக்கரிடம் விற்றுவிட்டார். 3 மாதம் கொல்கத்தாவில் ஷனத்தீக் பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டார். பின்னர் அங்கிருந்து அவரை மும்பை அழைத்து சென்று, அங்கு மற்றொரு பெண் புரோக்கரிடம் விற்று விட்டார்.

மும்பையில் இருந்து தப்பிய ஷனத்தீக், மீண்டும் ஒரு புரோக்கரிடம்  சிக்கினார். அந்த புரோக்கர் அவரை பெங்களூர், சேலம், திண்டுக்கல் என  பல்வேறு நகரங்களுக்கு அழைத்து சென்று, வலுக்கட்டயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். 4 மாதத்திற்கு முன்பு அவரை மதுரை அழைத்து வந்த அந்த புரோக்கர், மதுரை வானமாமலை நகரில் உள்ள பெண் புரோக்கரிடம் விற்பனை செய்து விட்டார். 2 மாதங்களுக்கு முன்னர் அந்த வீட்டில் ரெய்டு சென்ற காவல்துறையினர், அங்கிருந்த ஷனத்தீக் உள்ளிட்ட 4 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
 
இது பற்றி வங்கதேசத்தில் உள்ள ஷனத்தீக்கின் தந்தை சையத்கானுக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் மதுரை வந்தார். மேலும் மருத்துவ பரிசோதனையில் ஷனத்தீக் 8 மாத கர்ப்பம் என்பது தெரியவந்தது. பாஸ்போர்ட் இல்லாமல் ஷனத்தீக் இந்தியா வந்ததால் அவரை அகதியாக பதிவு செய்த அதிகாரிகள், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு மாதமாக மகளை அழைத்து செல்ல போராடும் சையத்கான், மதுரை ஆட்சியர் சுப்பிரமணியத்தை நேற்று சந்தித்து மனு கொடுத்தார். சையத்கான் கூறுகையில், “ஒரு வருடமாக எனது மகள் பற்றிய எந்த தகவலும் தெரியாததால் வேதனையில் இருந்தேன். அவர் மதுரையில் உள்ளார் என்று தெரிந்ததும், எனது நிலத்தை விற்பனை செய்து,  பாஸ்போர்ட் எடுத்து, கடந்த மாதம் மதுரை வந்தேன். எனது மகளை என்னுடன் அனுப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று  கூறி கதறி அழுதார்.

வெப்துனியாவைப் படிக்கவும்