சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (18:55 IST)
சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை(16.09.2014) உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
 
மெரினா காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது. இரு வழித்தட அரசு பேருந்துக்களில் வரும் மாணவர்களிடம் ஏற்பட்ட இந்த மோதலில், இரு மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
 
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, 8 மாணவர்களை கைது செய்தனர். இதேபோல கல்லூரியில் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக 8 மாணவர்கள் திங்கள்கிழமை நீக்கப்பட்டனர். மேலும் கல்லூரி மாணவர்கள் வரும் அரசு பேருந்துக்களில் திங்கள்கிழமை முதல் காவல்துறையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர். கல்லூரி வாசலிலும் மாணவர்கள் சோதனை செய்யப்பட்டே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
 
இந்நிலையில் அந்தக் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் நீக்கப்பட்ட 8 மாணவர்களையும் மீண்டும் கல்லூரியில் சேர்க்க வேண்டும், அப்பாவி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் மீது எடுக்கப்படும் நீதிமன்ற நடவடிக்கையை கைவிட வேண்டும், பணிமாற்றம் செய்யப்பட்ட முதல்வர் முகம்மது இப்ராஹிமை மீண்டும் மாநிலக் கல்லூரியில் பணியமர்த்த வேண்டும், மாணவர்கள் மோதலை தடுக்க காவல்துறை, அரசு போக்குவரத்துக் கழகம், கல்லூரி நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய கூட்டத்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
 
இந்த போராட்டத்தினால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் போராட்டத்தினால் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க இணை ஆணையர் சங்கர், துணை ஆணையர் லட்சுமி ஆகியோர் தலைமையில் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்