மின் கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் - விஜயகாந்த்

ஞாயிறு, 26 அக்டோபர் 2014 (08:40 IST)
பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் மின் கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாகவும், அதை சரி செய்திட, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தானாகவே முன்வந்து மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக சென்னையில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
அதிமுக அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே இதுபோன்ற நிதி நெருக்கடியை காரணம்காட்டி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தமிழக அரசு நிர்வாக திறமையும், மக்கள் நலனில் அக்கறையும் கொண்டதாக இருந்திருந்தால், மின்வாரியத்தில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், ஆளும் கட்சி ஆதரவுடன் நடைபெறும் மின்சார திருட்டையும் தடுப்பதன் மூலமாகவும், குறைந்த விலைக்கு கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தை முழுமையாக கொள்முதல் செய்வதன் மூலமாகவும், மின்வாரியத்தில் ஏற்படும் இழப்பை சரி செய்யமுடியும்.
 
மின் கட்டண உயர்வை அதிமுக அரசு அறிவித்தால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விவசாயிகள், சிறுவணிகர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் பாதிக்கப்படும் என்பதையும் அரசு சிந்தித்து பார்க்க வேண்டும்.
 
இதைத்தான் சென்னையில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, சென்னை மக்கள் சொன்ன அதே கருத்தைத்தான் எங்கு கருத்துகேட்பு கூட்டம் நடந்தாலும் மக்கள் சொல்வார்கள். எனவே மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிடவேண்டும்.
 
மின் வாரியத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க, தமிழக அரசு தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் அளித்துள்ள கிரானைட் முதலாளிகள், மணல் குவாரிகள், கடற்கரை தாது மணல் குவாரிகள் போன்ற அனைத்து குவாரிகளையும் அரசே ஏற்று நேரடியாக நடத்தினால், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் அரசுக்கு கிடைக்கும்.
 
இதன் மூலம் பொதுமக்கள் மீது திணிக்கப்படவுள்ள மின் கட்டண உயர்வு என்ற சுமை இல்லாமல் இருக்கும். எனவே, தமிழக அரசு பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை கைவிடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்