திருமாவளவன் - பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு: புது கூட்டணி கணக்கா?

புதன், 19 அக்டோபர் 2016 (15:06 IST)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
 

 
இன்று புதன்கிழமை காலை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்தார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ’நட்பு அடிப்படையில் மரியாதை நிமித்தமாக திருமாவளவனை சந்தித்துப் பேசினேன். தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை’ என்றார்.
 
ஆனாலும், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அடுத்த மாதம் நவம்பர் 19 ஆம் தேதி தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், தேர்தல் கூட்டணி கணக்காக இருக்கலாம் என கருதப்படுகிறது.
 
ஏற்கனவே, இடைத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடுவது பயனற்றது என்றும் மக்கள் நலக்கூட்டணி சார்பாக இந்த நான்கு தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிக்க மாட்டோம் என்று திருமாவளவன் கூறியிருந்தார்.
 
அதே சமயத்தில், ’தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை சில தினங்களில் ஆலோசித்து அறிவிக்கப்படும்’ என்று திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்