வஉசி பூங்காவுக்கு வரும் காதலர்களை தடுக்க கூடாது: ஜாதி மறுப்பு கூட்டியக்கம் மனு

வியாழன், 3 ஜூலை 2014 (15:25 IST)
ஜாதி மறுப்பு காதல் திருமணங்கள் சமூக ஒற்றுமைக்கும், நாட்டின் வழிகோலுகிறது. எனவே வஉசி பூங்காவுக்கு வரும் காதலர்களை தடுக்கக் கூடாது என்று ஜாதி மறுப்பு கூட்டியக்கம் காவல்துறையில் மனு கொடுத்துள்ளது.
 
ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் ஈரோடு வஉசி பூங்காவை பராமரிக்க வேண்டும். அங்கு வரும் காதலர்களால் பல இடையூறுகளும் அசம்பாவிதமும் நடக்கிறது என்று கூறினர்.
 
இதற்கு ஈரோடு மாவட்ட ஜாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த இயக்கம் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் நிலவன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன் ஆகியோர் தலைமையில் ஈரோடு மாவட்ட காவல்துறை எஸ்.பி.யிடம் ஒரு பரபரப்பு மனு கொடுத்துள்ளனர்.
 
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
 
வஉசி பூங்காவில் காதலர்களை அனுமதிக்கக் கூடாது. உள்ளே விடக்கூடாது என்ற அடிப்படையில் ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் பேசப்பட்டது. பூங்கா என்றால் எல்லோரும்தான் வருவார்கள். கணவன்–மனைவி மட்டும்தான் வர வேண்டுமா? காதலர்கள் வரக்கூடாதா?
 
ஜாதி மறுப்பு காதல் திருமணங்கள் சமூக ஒற்றுமைக்கும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் முக்கிய பங்காற்றுகிறது. ஆகவே ஜாதி மறுப்பு காதல் திருமணங்களுக்கு அதாவது காதலர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
 
பூங்காவில் திருட்டு, வழிப்பறி மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்க காவலர்களை நியமிக்கலாம். பூங்காவுக்குள் வரும் காதலர்களை எந்த வகையிலும் அச்சுறுத்தக்கூடாது என கேட்டு கொள்கிறோம்.
 
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்